நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குறளகம் என்ற திருக்குறளை மையமாகக் கொண்ட வாழ்வியல் பயிற்சி மையத்தின் 13ஆவது ஆண்டு விழாவையொட்டி இன்று(பிப். 16) ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது. கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் வை.கோபால் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
மணல் மற்றும் நவதானியங்கள் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், பாரதியார், பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, அப்துல் கலாம், எம்ஜிஆர், ஜெயலலிதா, பிரதமர் மோடி மற்றும் வனவிலங்குகள், இயற்கை காட்சிகள் ஆகியவற்றைப் பல வண்ண மணல்களைக் கொண்டு உருவாக்கியிருந்தனர்.
அதேபோல் சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்திய முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் படம், அரிசி, சிறுபயிறு, எள்ளு ஆகிய தானியங்களைக் கொண்டு வரையப்பட்டிருந்தது. இந்த ஓவியக் கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். அதோடு இந்த மணல் ஓவியங்களோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
ஓவியக்கலை குறித்து பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், கலையை வியாபார நோக்கில் இல்லாமல் சமூகப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த மணல் ஓவியங்களை வரைந்ததாக ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் வை.கோபால் தெரிவித்தார். ஏழு விதமான வண்ண மணல்களைக் கொண்டு இந்த ஓவியங்களை வரைந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி, தமிழ்நாட்டு எல்லைக்குள் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டாஸ்?!