கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் பால பிரஜாபதி அடிகளார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளும் ஆதிக்க மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழல் தொடர்ந்தால், தமிழ் மொழி முற்றிலும் அழிந்து போகும். தமிழை பாதுகாக்க, அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் சூழலில் தமிழ் மொழி வாழவும், தமிழர் நலன், உரிமையை மீட்டெடுக்கவும் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது கட்டாயம் அய்யா வழி பேரியக்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் வாழ நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
அதற்காக, விரைவில் நாங்குநேரி இடைத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபடவுள்ளேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக நாங்குநேரி தொகுதி வேட்பாளர் நாராயணன், அண்மையில் சாமிதோப்புக்கு வந்து பாலபிரஜாபதியை, சந்தித்து ஆதரவு தர கோரினார். இந்நிலையில், திமுக-காங்., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக, பாலபிரஜாபதி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.