கன்னியாகுமரி: அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் மாதம் 105 ரூபாய்க்கு பணியாற்றியுள்ளனர். பகுதிநேர ஊழியர்களுக்கான ஊதியத்திலே பணியாற்றி ஓய்வும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பிற பணியாளர்களுக்கு வழங்கியது போல், பணிவரன்முறைப்படுத்தி தங்களுக்கும் பணபலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஏற்கெனவே இந்த பணியாளர்கள் 16 முறை போராட்டங்கள் நடத்தினர்.
அப்போது, கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், நாகர்கோயில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், முதன்மை கல்வி அலுவலர் உட்பட 5 அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் என ஆறு பேர் மீது பிணையில் வெளிவர முடியாத வகையிலான ஏழு பிரிவுகள் உட்பட மொத்தம் 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
கடந்த (செப்.26) ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில், நேற்று(அக்.6) ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்கள் திடீரென கோட்டார் காவல் நிலையம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய கேட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: அரசு அலுவலக கட்டங்களின் தரம் குறித்த வழக்கு .. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு