கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கேரளாவில் இருந்து இறட்சி மற்றும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டபடும் விவகாரம் தொடர்பாக நாகர்கோவிலில் நேற்று (டிசம்பர் 23) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஹரிகிரண்பிரசாத், திருவனந்தபுரம் எஸ்பி ஷில்பா தலைமையிலான போலீசார் கலந்துகொண்டனர். கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் குறிப்பாக நீர்நிலைகளில் கொட்டி விட்டு செல்வதால் சுகாதாரசீர்கேடு ஏற்படுவதோடு இருமாநிலத்திற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக இரு மாநில போலீஸ் எஸ்.பி.க்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஹரிகிரண்பிரசாத், திருவனந்தபுரம் எஸ்பி ஷில்பா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கொளஷிக், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் ஆர்டிஒ சேதுராமலிங்கம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பாண்டியராஜன், பேரூராட்சி உதவி இயக்குநர் விஜயலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஹரிகிரண்பிரசாத், திருவனந்தபுரம் எஸ்பி ஷில்பா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படும் கோழி மற்றும் மருத்துவகழிவுகளை தடுப்பது தொடர்பாக புகார்கள் வருகின்றன.
இப்படி கொட்டப்படும் கழிவுகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். மாநில எல்லையில் உள்ள செக்போஸ்ட் அருகில் அறிவிப்பு பலகை வைப்பது. கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது. கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான உரிமம் ரத்து செய்யப்படுவது.
இதற்காக முக்கியமாக இரு மாவட்ட போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட சில அரசு அதிகாரிகள் அடங்கிய டாஸ்க்போர்ஸ் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கபடும். இதுதொடர்பாக அறிக்கை தயாரித்து இரு மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராணுவத்தில் வேலை எனக்கூறி 57 பேரிடம் பண மோசடி: எவ்வளவு தெரியுமா?