கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை மிக முக்கியமான சாலை ஆகும். இந்தச் சாலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி, திருவனந்தபுரம் செல்லும் வழியாகும். இதனால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுதியாகக் காணப்படும்.
தற்போது, இச்சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்துகளும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுவருகிறது. இச்சாலையை சீரமைக்க கோரி தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், உயிர்பலி வாங்கும் மரண பள்ளங்களாக இச்சாலை விளங்கிவருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச. 02) இச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் அரசுப் பேருந்து உரசியதில் பள்ளத்தில் விழுந்தனர். இதில், அப்பெண்ணின் மீது அரசுப் பேருந்து ஏறி இறங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு இதே சாலையில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்டத்தில் மிக முக்கியமான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இச்சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். உயிர் பலிகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!