கன்னியாகுமரி என்றாலே கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர தமிழ் புலவர் அய்யன் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபமும் அடையாளம். இதனை வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுற்றுலா படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைக் கண்டு ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, அமலில் உள்ள ஊரடங்கு தளர்வுகள் காரணமாக குமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இவர்கள் சுற்றுலா படகில் சென்று திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிக்க முடியாத ஏமாற்றத்தை போக்க மாலை நேரத்தில் மின் ஒளியில் ஜொலிக்கும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பதற்காக திரிவேணி சங்கம கடற்கரைக்கு வருகிறார்கள்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மின்னொளியில் ஜொலிக்கும் நேரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை மட்டும் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இங்கு இரவு நேரங்களில் மின்விளக்குகளை ஒளிர விடாமல், மாநில அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
இதனால் இரவு நேரத்தில் திருவள்ளுவர் சிலையின் அழகை கண்டு ரசிப்பதற்காக காலை முதல் இரவு வரை ஆவலுடன் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் மிகுந்த மன வேதனையுடனும் ஏமாற்றத்துடன் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
சுற்றுலா படகில் சென்று திருவள்ளுவர் சிலையைக் காண தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசு, இரவு நேரங்களிலும் கூட மின்விளக்குகளை போடாமலிருக்கும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு சுற்றுலா துறைக்கும் தமிழ் மற்றும் சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இரவு நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு மின்விளக்குகளை எரியச்செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.