கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி, ரேஷன் மண்ணெண்ணெய் போன்றவை பல்வேறு வழிகளில் கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, வருவாய்த் துறை அலுவலர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த கடத்தலை தடுத்து வந்தனர். அதேசமயம், கடத்தல்காரர்களும் பல்வேறு நூதன வழிமுறைகளை பின்பற்றி ரேஷன் பொருட்களை கடத்தி வந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பாசஞ்சர் ரயிலில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின் அடிப்படையில், இரணியல் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரயிலில் வருவாய்த் துறை பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ரயில் இருக்கைகளுக்கு அடியில் சிறிய மற்றும் பெரிய அளவிலான சாக்குப் பைகளில் ரேஷன் அரிசி அடைத்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த அரிசி மூடைகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் தங்களது அலுவலகத்திற்கு கொண்டு வந்து, அளவிட்டனர். இதில் சுமார் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை ரயில் மூலம் கேரளா கடத்தியவர்கள் யார் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.