கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கடத்தல்காரர்கள் காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நூதன முறைகளில் ரேஷன் அரிசியை கடத்துகின்றனர்.
இந்நிலையில் இரணியலில் இருந்து குளச்சல் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இரணியலுக்கும், குளைச்சலுக்கும் இடைப்பட்ட ஆழ்வார் கோயில் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனம் தூரத்தில் நின்றது. இதைக்கண்ட அவர்கள், அவ்வாகனம் அருகில் செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் வாகன ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்தபோது சிறுசிறு மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தல் அரிசி உணவு பொருள்கள் வழங்கல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி அருகே கஞ்சா விற்பனை? இருவர் கைது!