கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த அஞ்சுகிராமம் பகுதியில் இன்று கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கினார். அதில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகை கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி கூறியதாவது, "டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு விவசாயிகளை அழைத்து அவர்கள் தரப்பு நியாயத்தையும் கேட்டறிய வேண்டும். நான் விவசாயிகள் பக்கம் நிற்பேன். பெண்கள் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு கால தாமதம் இல்லாமல் உடனடியாக, தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சட்டம் படித்தவள் என்பதால் இதனைக் கூறுகிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் தனிப்பட்ட அடையாளமிருப்பதாக தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் விஜய் வசந்த் நல்ல உழைப்பாளி. அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் அரசியல் ஆர்வம் உள்ளவர்" எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர், "நேருவின் காங்கிரஸ் தற்போது இல்லை. ராகுல் காந்தியின் காங்கிரஸ் மட்டுமே உள்ளது. அதன் அடையாளம் அழிந்துவருகிறது. இதை காங்கிரஸ் மீது இருக்கும் வெறுப்பில் சொல்லவில்லை.
ரஜினி தன்னை அரசியலுக்கு வரச் சொல்லி காயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை ஒரு ரஜினி ரசிகையாக என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் வரமாட்டேன் வரச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்று சொல்வதற்கு முன், நான் கண்டிப்பாக வருவேன் என்று கூறாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை அவர் வந்திருந்தால் மாற்றத்திற்கான ஒரு வித்தாக இருந்திருப்பார்" என்றார்.