குமரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டியது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலான கனமழை பெய்தது. சாலையில் அதிக இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அதிகம் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் வடசேரியில் பழமையான கனகமூலம் சந்தை உள்ளது. இந்த சந்தையிலிருந்து கேரள மாநில வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வர். நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால், அப்பகுதியில் இருந்த பழமைவாய்ந்த சுவரின் அருகில் சிறுமி உட்பட நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். கனமழையில் நனைந்த அந்த சுவர் திடீரென இடிந்து, அவர்கள் மேல் விழுந்தது. அப்போது அருகிலிருந்தவர் அச்சிறுமியை படுகாயங்களுடன் மீட்டார்.
இதில் சுவரின் அருகில் நின்று கொண்டிருந்த நான்கு பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சந்தையில் இருக்கும் பழமையான சுற்றுச் சுவர்களை இடித்து அகற்றி, புது சுவர்களை கட்டுவதற்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உயிரிழப்பு!