கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் அருந்ததியர் தெருவில் ஏராளமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அந்தப் பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் அலுவலர்கள் தரப்பில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "எங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அலுவலர்கள் தருவதில்லை. அதே நேரத்தில் எங்களை வெளியே சென்று பொருள்கள் வாங்கவும் அனுமதிப்பதில்லை. இதனால் நாங்கள் கடந்த சில நாள்களாக பட்டினியால் தவித்துவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.