கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி, செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் களிமண்களை வெட்டி எடுத்து வந்து அதனை மண்பாண்ட பொருட்களாக செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சமீப காலமாக மண்பாண்ட பொருட்கள் செய்ய தேவையான களிமண் எடுப்பதற்கு தொழிலாளர்களுக்கு போதிய அளவு அனுமதி சீட்டுகள் வழங்காமலும் மேலும் களிமண் எடுத்து வரும் வாகனங்களை அரசு அலுவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.
மண்பாண்ட பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக அளவு வரவேற்பு இருந்தும் அதற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்கள் செய்ய களிமண் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே, மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மண்பாண்ட பொருட்கள் செய்வதற்குத் தேவையான அளவு களிமண் எடுப்பதற்கு இலவசமாக அனுமதி கொடுப்பதோடு, உரிய அனுமதி சீட்டும் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.