கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, இன்று (செப்.17) மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. அதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கனிமவள கடத்தல் என்ற சரித்திரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய பங்கு வகிப்பார். நாங்கள் தேர்தலுக்காக எதுவும் செய்வது இல்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
மாவட்டத்தில் இருக்கும் கனிம வளங்களை அழிப்பதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை. கனிமவள கடத்தலுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று மனோ தங்கராஜ் கூறிய கருத்து வேடிக்கையானது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் யார் பொறுப்பில் உள்ளார்களோ? அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை தவற விட்டுவிட்டு நாங்கள் பொறுப்பில்லை என்று கூறுவது, அவர் அமைச்சர் பொறுப்பிற்கு லாயக்கற்றவர் என்பதன் பொருள் எனத் தெரிவித்தார்.
இந்த ரத்ததானம் முகாமில், நாகர்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. எம். ஆர். காந்தி, மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து