தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 6) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதனுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 631 இடங்களில் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஐந்து இடங்களில் உள்ள 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மொத்தம் 288 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 7 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ளனர். இவர்களில் மத்திய அரசின் சிறப்பு கலவர தடுப்புப் பிரிவு வீரர்களும் அடங்குவர்.
பல வாக்குச்சாவடிகளில் 50% துணை ராணுவத்தினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் இன்று (ஏப்ரல் 5) காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரம், சனிடைசர், முகக் கவசங்கள், மை உள்ளிட்டவை கொண்டு செல்லும் வகையில் 240 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்கு பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் வந்ததும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, பின்னர் சனிடைசர் வழங்கப்படும். பின்னர் கையுறை வழங்கப்பட்டு வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளை அழைத்துச்செல்ல மூன்று சக்கர வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 1,03,558 பேருக்கு கரோனா, 478 பேர் உயிரிழப்பு