குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர், சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். அவரை குமரி காவல் துறையினர் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசி மீது ஏற்கனவே இரண்டு பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காசியின் தந்தை தங்கபாண்டியன், தன் மகன் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “காசி மீது காவல் துறையினர் பொய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் காசியை என்கவுன்டர் செய்யவும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி, நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
நாங்கள் வசித்து வரும் வீட்டை முறையான அனுமதி பெற்றே கட்டியுள்ளோம். ஆனால் முறையற்ற வகையில் வீட்டைக் கட்டியுள்ளதாகக் கூறி, அதனை ஜப்தி செய்யும் நோக்கில் நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய மகன் காசி, என்னுடன் கோழி வியாபாரம் பார்த்து வருகிறார். அதிலியே நிறைய பணம் கிடைக்கிறது. அப்படியிருக்கையில் அவர் ஏராளமான பெண்களை ஏமாற்றி பணம் பறித்தார் என்று கூறுவது நியாயமற்றது. அவருக்கு பணம் பறிப்பதற்கான அவசியம் இல்லை. ஏனெனில், கோழி வியாபாரத்தில் மாதம் அவருக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. அவரின் வளர்ச்சியைக் கெடுக்கவே அவர் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆகவே நியாயமாக வழக்கை நடத்த வேண்டும். அதற்காகத் தான் மனு அளித்துள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!