கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வாகரன். இவர் அதே பகுதியில் சொந்தமாக வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு இரு தினங்களுக்கு முன்பு மொபைல் போனில் அவரது ஆட்டோவின் பதிவெண்ணுடன் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில், உங்களது TN75AH-8337 என்ற இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல், சாலை விதிகளை மீறியும் அதி வேகமாகவும், காப்பீடு உள்ளிட்ட எந்த ஆவணங்களுமுமின்றி ஓட்டி வந்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும், இவரது ஆட்டோ பதிவெண்ணில் குலசேகரம் காவல் துறையினர், ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த குறுந்தகவலின் அடிப்படையில், அவர் இணையதளத்தில் தேடினார். அப்போது அவரது ஆட்டோ எண்ணை இருசக்கர வாகனம் என குறிப்பிட்டு, ஹெல்மட் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரோனா ஊரடங்கு காரணமாக வாடகை ஆட்டோவை ஓட்டாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ள நிலையில், சுமார் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊரான குலசேகரம் வட்டார பகுதிக்குச் சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
கரோனா ஊரடங்கு காலத்தில் தங்களது பணியை காப்பாற்ற பொறுப்பில்லாமல் கையில் கிடைத்த வாகன எண்களை வைத்து அபராதம் விதித்த காவல் துறையினரின் செயல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யானையை துரத்தி அச்சுறுத்திய வாகன ஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!