கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், “கச்சா எண்ணெய் பேரலுக்கு 16 அல்லது 17 டாலர் என்ற விலை இருந்தபோதிலும் மத்திய, மாநில அரசுகளின் கையில் பணம் இல்லாததால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் 25 ரூபாய்க்கு விற்பதற்குப் பதிலாக 83 ரூபாய்க்கு விற்கப்படுவது அநியாயமான ஒன்று.
தமிழ்நாடு அரசு ஒரு வரியைப் போடுகிறது. மத்திய அரசு ஒரு வரியைப் போடுகிறது. இதனால் பெட்ரோல் விலை உச்சத்தை அடைந்துள்ளது. எனவே, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஐந்து பணக்காரர்கள் இந்தியப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர். ஏழைகள் வாங்கிய கடன் தொகையை மூன்று மாதம் வசூல் செய்யக் கூடாது என மத்திய அரசு அறிவித்தும், வங்கிகள் இதனைக் கண்டுகொள்ளாமல் ஏழைகளுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றன.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நிவாரணமாக 20 லட்சம் கோடி ரூபாய் என அறிவித்தார்கள். அது எங்கே போய், யாரைச் சேரும் எனத் தெரியவில்லை” என்றார்.
இதையும் படிங்க:கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின்போது நிகழும் பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம் நியாயமானதா? - சிறப்புக் கட்டுரை