சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பிரசித்திப் பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக நவராத்திரி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நவராத்திரி திருவிழா இன்று (அக். 17) தொடங்கி வருகின்ற 26ஆம் தேதி வரை 10 நாள்கள் நடக்கிறது.
இதனையொட்டி இன்று காலையில் பகவதி அம்மன் கோயிலில் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொலுமண்டபத்தில் பக்தர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கொலுவிற்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10ஆம் திருவிழா அன்று முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை நிகழ்ச்சி மகாதானபுரத்திலும், கோயிலிலிருந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று மகாதானபுரத்தில் பானாசுரன் என்ற அரக்கனை வதம்செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சிம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக 10ஆம் திருவிழாவான பரிவேட்டை நிகழ்ச்சி 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு பகவதியம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஈசான மூலையில் நடக்கிறது.
இந்தப் பரிவேட்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் பகவதி அம்மன் கோயிலுக்கு, டெல்லிக்கான தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வந்திருந்தார். அப்போது பக்தர்கள் சங்கம் சார்பில் 26ஆம் தேதி நடைபெறும் விழாவிற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கோரிக்கைவைக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: கேள்விக்குறியான தகுந்த இடைவெளி: கங்கா தசராவில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!