சென்னை: தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான எம்டி, எம்எஸ், டிஎன்பி ஆகியப் படிப்புகளில் 2294 இடங்கள் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது.
அவற்றில் 1094 இடங்கள் மருத்துவத்துறையில் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 50 சதவீதம் எம்பிபிஎஸ் படித்துவிட்டு, அரசுப் பணியில் இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள முதுகலைப் படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 89 இடங்கள் உள்ளது.
மேலும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 8182 மருத்துவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4139 மருத்துவர்களும் என 12 ஆயிரத்து 321 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 446 மருத்துவர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி: தமிழ்வழி சான்றிதழ் முறைகேடு விவகாரம்: தேர்வர்களுக்கு தற்காலிக நியமன ஆணை?
அதில், என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கு 446 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 223 மருத்துவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் சான்றிதழ்கள் முழுமையாக சமர்பிக்காத 221பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், "முதுகலை மருத்துவப்படிப்பில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேர்வதற்கு போலியாக தூதரக சான்றிதழ்களை அளித்த 46 மருத்துவர்கள் மீது காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவர்களின் விபரங்களும், தூதரகத்தில் பெறப்பட்ட போலி சான்றிதழ்களும் இணைத்து அளிக்கப்பட்டுள்ளது" என்று மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அருணலதா தெரிவித்தார்.