கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே சுசீந்திரம் பைபாஸ் சாலையோரமாக ராகவேந்திரா மந்த்ராலயம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வார்கள். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. கோயிலில் பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம் போல் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 19) காலை கோயிலை திறப்பதற்காக அனந்தகிருஷ்ணன் சென்ற போது, கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோயிலுக்குள் இருந்த இரண்டு உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுசீந்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், கொள்ளையர்கள் கோயில் பின்புறம் உள்ள கம்பியில் கயிறு கட்டி அருகிலுள்ள வயல்வெளிவழியாக தப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்குப திவாகி இருந்த கைரேகைகள் மற்றும் கால்தடங்களை பதிவு செய்தனர். மேலும் அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காட்டுயானையாக இருந்து, கும்கியாக மாறிய முத்து யானையின் முதல் டாஸ்க்!