கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர், 65 வயதான மூதாட்டி புஷ்பம். இவரது கணவர் முத்து. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இரண்டு மகன்களுக்கு கல்யாணம் ஆன நிலையில், பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில், வங்கியில் கடன் வாங்க வேண்டும் எனக் கூறி இரண்டு மகன்களும் தன் பெற்றோருக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கி உள்ளனர். பின்னர், இரண்டு மகன்களும் தாய், தந்தை மற்றும் சகோதரியை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: பங்காரு அடிகளார் செய்த புரட்சிகள் என்னென்ன?
இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பம் மற்றும் முத்து தம்பதியினர் தன் மகன்கள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக இருந்த 20 சென்ட் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால், பல முறை புகார் கொடுத்தும் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, மூதாட்டி புஷ்பம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு, உருண்டு அழுது புலம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
இதையும் படிங்க: சொந்த மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!