குமரி மாவட்டம் திருச்விதாங்கோடு அடுத்த நாககுழிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ் சீலன். இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், "நான் எனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள மைலகோடு கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்துவருகின்றேன். இந்த வீட்டுமனை எட்டரை சென்ட் கொண்டதாகும்.
இதில் 4 சென்ட் சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட இழப்பீடு கிடைத்த நிலையில், இதற்கான இரண்டாவது இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. நாங்கள் தற்போது 25 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்துவருகிறோம்.
எங்களைத் தவிர அனைவருக்கும் இரண்டாவது இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதை அலுவலகத்திற்குச் சென்று விசாரிக்கும்போது அங்குள்ள அலுவலர்கள் என்னை மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர்.
சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் நில அளவையர் என்னை இறக்கச் சொல்கிறார். இதனால் 60 வயதாகும் நான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி உள்ளேன். நான் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முதியவர் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருமணமானதை மறைந்த கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார்!