குமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த எழுபது வயது மூதாட்டி கிரேஸ் மீரா. இவரது மகன் ஜான் விக்டர் தாஸ், ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கத்தின் தலைவராக உள்ளார். கிரேஸ் மீரா, மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில், ஜான் விக்டர் தாஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவி பிரியாவோடு சேர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும், வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்து வருவதாகவும் கிரேஸ் மீரா முன்னதாகவே புகார் அளித்திருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட நான்கு புகார் மனுக்கள் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்று நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மீரா புகாரளித்தார். பின்னர், கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார். இதைக் கண்ட காவலர்கள் கிரேஸ் மீராவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து கிரேஸ் மீரா கூறுகையில், எனது மகன் ஒரு அமைப்பின் நிர்வாகி என்பதால் காவல்துறையினர் அவருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால் ஏற்பட்ட மன வேதனையில் தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்தார்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மாநில அரசின் மருத்துவ உதவி எண்ணான 104-ஐ தொடர்பு கொள்ளலாம். இல்லையெனில் சிநேகா தற்கொலை தடுப்பு பிரிவின் உதவி எண்ணான 044-24640050-த்தை தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: நெகமத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - போலீஸ் விசாரணை!!