கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள், மீன்பிடித்தொழில், கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு பணியில் வட மாநிலங்களைச் சேர்ந்த 9800 பேர் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கால் பொதுபோக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் வெளி மாநில தொழிலாளர்கள் தவித்துவந்தனர்.
வெளி மாநிலங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையை தொடங்கியது. இதனையடுத்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். இந்நிலையில் முதற்கட்டமாக 847 வெளி தொழிலாளர்களஒ நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பிகாருக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் ரயில் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட நேரே இவர்களை வழியனுப்பி வைத்தார். நாகர்கோவிலில் இருந்து 24 பெட்டிகளுடன் கிளம்பிய ரயிலில் 14 பெட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் செல்கிறார்கள். இதில், எஞ்சியுள்ள 10 பெட்டிகளில் விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இணைவார்கள். பின்னர் இந்த ரயில் பிகார் நோக்கி செல்ல உள்ளது.
இதையும் பார்க்க: தமிழ்நாட்டில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு