கன்னியாகுமரி: பூமியில் தோன்றிய மிக முக்கியமான அம்சமாக மரம், செடி கொடிகள் உள்ளன. இவை பச்சை நிறத்தை போர்வையாக பரந்து விரிந்து பூமியை பசுமையாக வைத்துள்ளது. மனிதனின் உதவி இல்லாமல் மரம், செடி மற்றும் கொடிகளால் வாழ முடியும். ஆனால், இவைகளின் உதவி இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது.
ஆகையால்தான் மனிதனுக்கும், மரங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு தாயும், குழந்தையும் போல பிண்ணி பிணைந்து உள்ளது. மனிதன் உயிர் வாழ பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். குடிப்பதற்கு நீர் அவசியம். உண்பதற்கு உணவு அவசியம். வாழ்வதற்கு வாழ்விடங்கள் அவசியம். இந்த அவசியமான அனைத்தையும் வழங்குவது மரம் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள். இவை மழை உருவாக காரணமாக உள்ளன.
இவை உண்பதற்கு தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தருகிறது. வாழ்விடங்களை அமைக்க மரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. பூமியின் மேற்பரப்பு வெப்பம் அடையாமல் இருக்க மரங்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மரங்கள் இல்லாத பாலைவனம் மற்றும் பனி துருவங்களில் மனிதன் வாழ்வது இல்லை. ஆகையால் நாம் மரங்களை வளர்ப்பதால் அதிக வளமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வரம்தான் இந்த மரங்கள். இவை அதிக அளவில் நன்மைகளை வழங்குவதோடு, இந்த பூமியையும் அழிவில் இருந்து பாதுகாத்து வருகிறது. அப்படி நம்மை பாதுகாத்து வந்த மரங்கள் மற்றும் செடி, கொடிகளை பல்வேறு காரணங்களைக் கூறி அரசும், பொதுமக்களாகிய நாமும் அழித்து வருகிறோம். மரங்களின் அவசியத்தை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு அமைப்புகள் மரம் நட்டு விழிப்புணர்பு ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளை தொடங்கியபோது வான் உயர்ந்து நின்ற ஏராளமான மரங்களை வெட்டி சாலை அமைக்கப்பட்டது. இதைப் போன்று ஏராளமான குளங்கள் மூடப்பட்டு சாலை பணிகள் நடந்தது. மாவட்டம் முழுவதும் 75 சதவீத தேசிய நெஞ்சாலைப் பணிகள் முடிவடைந்து உள்ளன. மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முடிந்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதிசாரம் பகுதியில் அமைந்து உள்ள சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மரம் நடும் இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பூமி வெப்பம் அடைவதை தடுக்கவும், பயணிகளின் வசதிக்காகவும், 75வது சுதந்திர தின விழா நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த மரம் நடும் இயக்கம் துவங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி முதல் கேரளா மாநில எல்கையான களியக்காவிளை வரையிலும் உள்ள நான்கு வழிச் சாலைகளில் இரு பக்கங்களிலும் மரங்கள் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு; குழந்தையைக் கடத்திய தம்பதி கைது