கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு மானூர் பகுதியைச் சேர்ந்தவரான டேவிட்ராஜ், வாள் சண்டை விளையாட்டில் தேசிய அளவில் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். இந்நிலையில், திருவட்டாறு காவல் ஆய்வாளர் ரவீந்திரன் முன்பகை காரணமாக தன்னை கொலை செய்யும் நோக்கில் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
"திருவட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் என்னை நிரந்தரமாக ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார். முளகுமூடு பகுதியில் செயல்பட்டுவரும் டிராவல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேட்டை நான் தட்டிக் கேட்டதால் அதன் உரிமையாளர்கள் தூண்டுதலின் பேரில் காவல் ஆய்வாளர், காவல்துறையினர் என்னை கடுமையாகத் தாக்கினர்.
மேலும் நான் டிராவல்ஸ் உரிமையாளரை கடத்தியதாக பொய் புகாரை தயார் செய்து, என்னை நிரந்தரமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி போராடும் என்னை காவல்துறையினரிடமிருந்து காப்பாற்றுவது மட்டுமின்றி, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் காவல் ஆய்வாளர் ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற பொய் வழக்குகள் பதிவுசெய்து என்னை கொலை செய்வதற்கு காவல் துறை செயல்பட்டு வருகிறது. எனவே, என்னை கருணைக் கொலை செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்" என்றார்.