திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துராஜா, புஷ்பவல்லி தம்பதியர். நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர்களான இவர்கள் ஒரு குழுவாக நேற்று குளச்சல் பகுதியில் தேன், பாசி மாலை விற்பனை செய்ய வந்தனர்.
பின்னர் நேற்றிரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு அங்கே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முத்துராஜா புஷ்பவல்லி தம்பதியரின் எட்டு மாத பெண் குழந்தை துர்காவள்ளியை கடத்திச் சென்றனர்.
கண் விழித்துப் பார்த்த அந்த தம்பதியர் குழந்தை காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி குளச்சல் பேருந்து நிலையம், முக்கியப் பகுதியில் உள்ள சிசிடிவிகளைக் கைப்பற்றி விசாரிக்க முற்பட்டபோது எந்த சிசிடிவி கேமராக்களும் மின் இணைப்பு இன்றி உபயோகத்தில் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனியார் கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியைக் கைப்பற்றி குளச்சல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.