கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக சரவணக்குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார். இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தினார்.
மாவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தியது. வடசேரி சந்தையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு, சாலை மேம்பாடு ஆகியவற்றில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார். இதனால் குமரி மாவட்ட மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணக்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஆஷா அஜித் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இது நாகர்கோவில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆணையர் மாற்றத்தை கண்டித்தும், மீண்டும் சரவணக்குமாரையே நாகர்கோவிலில் நியமிக்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆணையர் மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி சாதிகா ஸ்ரீ என்பவர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகை ஏந்தியபடி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்