குமரி மாவட்டம், நாகர்கோவிலில் யூனிக் அஸட் ப்ரமோட்டர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாதாமாதம் தவணை முறையில் பணம் செலுத்தினால் 5 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் பெரும் தொகை தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
இதனை நம்பி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் தொகை முதிர்ச்சி அடைந்து அவர்களுக்கு நிறுவனம் சார்பில் காசோலை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த காசோலை செல்லாததால் ஆதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை அவர்கள் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று பொதுமக்கள் நிதி நிறுவனத்தின் முன் கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வடசேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து வடசேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.