அகில இந்திய நாடார் மக்கள் பேரவை கூட்டம் இன்று மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுபாஷ் நாடார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடார் மக்கள் பேரவையைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பால ஜனாதிபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், " பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கொடுமையாக தாக்கி கொலை செய்த சம்பவத்தை அகில இந்திய நாடார் மக்கள் பேரவை கண்டிக்கிறது. இந்த கொடிய செயலுக்கு கொலை வழக்கு பதிவு செய்வதற்கான எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. சாத்தான்குளம் சம்பவம் காவல் துறைக்கே அவமானத்தை உருவாக்கக்கூடிய வகையில் அமைந்ததோடு, காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.
எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். இதில், தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு நல்ல தரமான வழக்கறிஞரை நியமித்து வழக்கு நடத்த வேண்டும்.
வணிகர்களின் மரணத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். தூத்துக்குடி காவல் துறை கண்காணிப்பாளர் இந்த குற்றத்தை மறைப்பதற்கும், தடயங்களை மறைப்பதற்கும் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். மனிதனை மனிதனாக பார்ப்பதற்கு தகுதி இல்லாதவன் மனிதனாக பிறந்ததில் அர்த்தமில்லை" என்றார்.
இதையும் படிங்க: காவல் துறையினர் தாக்குதல்: இளைஞர் மனமுடைந்து தற்கொலை