கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் சிந்துமோன். இவர் ஆடல் பாடல் உள்ளிட்ட கச்சேரிகளுக்கு செல்லும் தொழில் செய்து வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு இரவு ஒரு கச்சேரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான ஜஸ்டின் மற்றும் ஆல்வின் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் அன்று இரவு சிந்துமோன் வீட்டிற்கு சென்ற ஜஸ்டின் மற்றும் ஆல்வின் இருவரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக இருவரையும் களியக்காவிளை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் குற்றம் சாட்டப்பட்ட ஆல்வின் மற்றும் ஜஸ்டின் ஆகிய இருவரும் குற்றவாளி எனக் கூறி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்தாண்டுகளுக்கு பின்னர் சகோதரர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.