கரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருள்களான காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்டவை அனுமதி பெற்று திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட சாலையோரப் பகுதிகளில் உள்ள காய்கறிக் கடைகளைப் பேருந்து நிலையத்தில் வைத்து விற்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனுமதி பெறாமல் கடை வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர்கள் எச்சரித்துவந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை, நகராட்சித் துறை அலுவலர்கள் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள கடைகளை ஆய்வுசெய்தனர். பின்னர், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறிக் கடைகளை ஆய்வுசெய்தபோது சமூக விலகலைக் கடைப்பிடித்து பொருள்கள் வாங்க பொதுமக்களை அறிவுறுத்தினர்.
பின்னர் தரங்கம்பாடி சாலையில் அனுமதியின்றி இயங்கிய காய்கறிக் கடைகளை அப்புறப்படுத்தக் கோரி, தராசுகளைப் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து மீன் சந்தையில் ஆய்வுசெய்த அலுவலர்கள் விற்பனைக்காக வைத்திருந்த அழுகிய மீன்களைப் பறிமுதல்செய்ய முற்பட்டனர். அப்போது வியாபாரிகள், அலுவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், உடனடியாக மீன் விற்பனையை புதிய பேருந்து நிலையத்தில் மாற்றக்கோரி உத்தரவிட்ட அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவையும் மீறி கறிக் கடைகளில் குவியும் கூட்டம்