குமரி மாவட்ட பாஜக மூத்தத் தலைவர் எம்.ஆர். காந்தி(70). இவர் பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் சர்குண வீதியில் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி காலை ஆறு மணி அளவில் இவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அடைாளம் தெரியாத நபர்கள், இவரை வெட்டிக் கொல்ல முயன்றனர். இதில் எம்.ஆர். காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து, நேசமணி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த செய்யது அலி நவாஸ், இளங்கடை சாம்பவர் தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முஹமது சாலி, கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த ஷாஜி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்துபேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜ், குற்றச்சாட்டு மீதான போதிய ஆதாரம் இல்லாததால் ஐந்து பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.