சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் சூரியன் உதயம், மறைவு திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்பட பல இடங்களை பார்வையிட்டு திரும்புகின்றனர். மேலும், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பலரும் முக்கடல் சங்கமம் பகுதியில் புனித நீராடுகின்றனர்.
பின்னர் கடற்கரையில் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்கின்றனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி கடற்கரை சமீபகாலமாக சுகாதார சீர்கேட்டின் புகலிடமாக மாறியுள்ளது. இப்பகுதியில் தற்காலிக கடை நடத்தி வருபவர்கள் கெட்டுப்போன உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை கொட்டுகின்றனர்.
அது மட்டுமில்லாமல் திறந்த வெளியில் பொது கழிப்பறை ஆகவும் இதை சிலர் பயன்படுத்துகின்றனர். இந்த கழிவுகள் அனைத்தும் தண்ணீரில் கலப்பதால் கடல் நீர் மாசுபடுவதோடு, கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் மீன்களும் பாதிக்கப்படுகின்றன.
கோடை சீசன் என்பதால் இப்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். எனவே இப்பகுதியில் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடற்கரையில் குப்பை கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.