கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி, இன்று (நவ. 25) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர், குமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆலஞ்சோலை-பத்துகாணி-ஆறுகாணி வரை உள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும்.
14 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். காந்திமதி எஸ்டேட் பகுதியிலுள்ள மூன்று கி.மீ. சாலையில் பள்ளங்கள் உள்ளதால் சாலையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும். மலையோரங்களில் பெய்யும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை பழுதாகிவிடுகிறது.
நாகர்கோவிலிலிருந்து தக்கலை, மேங்கா மண்டபம், உள்ளூர், திருவட்டார், குலசேகரம், களியல், பத்து காணி, ஆறுகாணி வழியாகச் செல்லும் வழித்தடம் எண் 341 பேருந்து கரோனா வைரஸ் முழு அடைப்பை முன்னிட்டு நிறுத்தப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் அந்தப் பேருந்தை இயக்க ஆவனசெய்ய வேண்டும்.
மேலும், தடம் எண் 85டி பேருந்து மார்த்தாண்டம், மேல்புறம், நெறியில், கொல்லை, பணசமூடு, வெள்ளிடை, கொடப்பனைமூடு, கூட்டபூ, ஆறுகாணி, அணைமுகம் செல்லும் பேருந்து, பத்துகாணி வழியாக இயக்கப்படும் 80டி பேருந்தும் தடங்கல் இல்லாமல் தினமும் இயங்க ஆவனசெய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சொத்தை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு!