கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவமனை அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் மாவட்டத்தில் தொற்று விகிதம் 26இல் இருந்து 18 விழுக்காடாக குறைந்துள்ளது.
இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.