கன்னியாகுமரி: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குமரியில் இரு தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் சாலை பணி, கட்டுமானப் பணி மற்றும் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்த ஆய்வு நடத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக கல்குளம் அரசு பள்ளியில் 5 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு ரூபாய் 84.25 லட்சத்தில் புதிதாக 5 வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டும் விழா இரு தினங்களுக்கு முன்பு நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த பள்ளிக்கூடத்தில் கட்டப்பட இருக்கும் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க பள்ளிக்கு வருகை தந்தார். பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு வரைபடம் போடப்பட்ட பகுதியை பார்வையிட்ட அமைச்சர், பள்ளிக்கு குழந்தைகள் வரும் நுழைவு வாயிலை அடைத்தும், அடுத்த கட்டிடங்களை மறைத்து மற்றொரு பள்ளி கட்டிடம் கட்டுவதா? என பொதுப்பணித் துறை பொறியாளர் ஜெனியிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், காற்றோட்டமான சூழ்நிலையில் கட்டடம் இருக்க வேண்டும். பிள்ளைகள் வந்து செல்வதற்கான வழி பாதை குறுக்கலாக உள்ளது, ஆகவே அதனை மாற்றி அமைக்க வேண்டும். ஆகையால் இந்த பிளானை மாற்றி புதிதாக பிளான் போடுங்கள் என சற்று காட்டமாக அதிகரிகளிடம் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை ஆசிரியர் சார் முன்னாடி இதுல தான் ஸ்கூல் இருந்தது சார் என்று கூறியவுடன் கோபமடைந்த அமைச்சர்
அம்மா உங்களிடம் நான் கேட்கல, ஏன்னா வாத்தியார் மாருங்க லட்சணம் தெரியும். ரொம்ப யோக்கியமாகத் தான் இருக்கிறீர்கள். உங்க சொந்த வீடுனா இப்படி கட்டுவீங்களா? என்று கூறியதோடு ஸ்கூல் கட்டிடங்கள் காற்றோட்டமாக அமைய வேண்டும் என்றும் திரும்ப பிளான் பண்ணு இல்லைனா நானே ஒரு பிளானை போட்டு தருகிறேன் என்று ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இது இரு தினங்களுக்கு முன்பாக நடைபெற்று இருந்தாலும் தற்போது அமைச்சர் அதிகாரிகளிடம் காட்டமாகவும் கண்டிப்புடன் பேசுவது தலைமை ஆசிரியர் ஒரு பெண் என்றும் பாராமல் பேசிய அந்த வீடியோவானது சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கருத்து கூறும் போது, ”அதிகாரிகளிடம் அமைச்சர் கண்டிப்புடன் நடந்து கொண்டதுடன் பிள்ளைகளின் நலன்களிலஅக்கரை காட்டுவது நல்லது என்றாலும் ஒரு பெண் தலைமை ஆசிரியரிடம் அந்த கூட்டத்தில் காட்டமான வார்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டாம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.