கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக வீடுதோறும் சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் இருந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த மாதம் கட்டிய அதே மின் கட்டணத்தை இந்த மாதம் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒரு வேளை கடந்த மாதத்தை விட இந்த மாதம் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் அதற்கான மீதமுள்ள கட்டணம் அடுத்த முறை மின்கட்டணம் செலுத்தும் போது கழித்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பல இடங்களில் ஜூன் மாதம் கட்டிய மின் கட்டணத்தையே ஜூலை மாதமும் கட்டினர். ஆனால் சிலருக்கு அதிக கட்டணம் வந்துள்ளது. உதாரணமாக நான்காயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தியவர்கள் அதே கட்டணத்தை இந்த மாதமும் கட்டுவதற்கு சிரமப்பட்டனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, ரீடிங் இயந்திரத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்து காட்டினால் அதற்கு தகுந்தார்போல் கட்டணம் நிர்ணயம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
காரோனா காலத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மின்வாரிய ஊழியர்கள் தகுந்த முறையில் மின் கணக்கீடு செய்து அதற்கான கட்டணத்தை பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.