கன்னியாகுமரி: உண்ணாமலைகடை அடுத்த முடியாம்பாறை பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் வரை செல்லும் அரசு பேருந்தில், ஆத்தூர் பகுதியில் இருந்து பயணம் செய்து உள்ளார். அப்போது, பேருந்து நடத்துநர் காந்தி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரிடம் பயணச் சீட்டுக்குப் பணம் கேட்டுள்ளார். அதனை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கும், நடத்துநர் காந்தி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், ஆத்திரம் அடைந்த நடத்துநர் காந்தி, மனநலம் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியுள்ளார். பதிலுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டனும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பேருந்து ஒட்டுநர் பத்மகுமார் என்பவரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்திற்குள் கீழே விழுந்துள்ளார். அதன் பிறகும் கூட அவரை கொடூரமாக, செருப்பால் தாக்கியுள்ளனர்.
இதனைப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. தற்போது அக்காட்சிகளின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், மனநலம் பாதிக்கப்பட்ட நபரைக் கொடூரமாகத் தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் பதமகுமார் மற்றும் நடத்துநர் காந்தி ஆகிய இருவரையும், நாகர்கோவில் ராணி தோட்டம் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உள்ளார். இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபரைப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கடுமையாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் புகைப்படங்கள் வெளியானது!