திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஏராளமான வங்கதேச இளைஞர்கள் தங்கி இருப்பதாக கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் எஸ்பி பத்ரி நாராயணன், ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான குழுவினர் பல்லடம் அருகே அருள்புரம், செந்தூரன் காலனி பகுதியில் இயங்கி வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் போலியான ஆவணங்களை கொடுத்து பணியாற்றி வந்த 28 வங்கதேச இளைஞர்களை கைது செய்தனர்.
மேலும், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு வங்கதேச இளைஞர்களும், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வங்கதேச இளைஞர் என 31 பேர் கைது செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரது வங்கதேச குடியுரிமை சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீது முறைகேடாக இந்தியாவில் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 31 பேரும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நடந்த காவல்துறை விசாரணையில், வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் வங்கதேச இளைஞர்கள், வேலைவாய்ப்பு நிறைந்த இடங்களில் குடியேறி, தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். கடந்த 5ம் தேதி முறைகேடாக பல்லடத்தில் தங்கியிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து மேற்கு மண்டல தீவிரவாத தடுப்பு குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் ஊதியம்
வங்கதேசத்தில் கிடைக்கும் ஊதியத்தை விடவும் இந்தியாவில் கூடுதல் ஊதியம் கிடைப்பதால் வங்கதேச இளைஞர்கள் பெரும்பாலும் இந்தியாவில் முறைகேடாக நுழைந்து பணியாற்றி வருகின்றனராம். திருப்பூர் போன்ற தொழில் நகரில் ஏராளமான வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதால் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது அடையாளங்களை எளிதில் மறைக்க முடிந்து இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. அதிக ஊழியர்கள் வேலைக்கு தேவைப்படும் திருப்பூர் பனியன் நிறுவனங்களில், அதிக ஊதியத்தில் உடனடியாக வேலை கிடைப்பதும், திருப்பூரில் வங்கதேச இளைஞர்கள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முன்னோர்கள் வாக்கு; ஆறு தலைமுறையாக பொங்கல் கொண்டாடாத கிராமம்..! ஏங்கும் பெண்கள்! என்ன காரணம்?
ஒன்றன்பின் ஒன்றாக வருகிறார்கள்
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை தங்கி பணியாற்றி வந்ததும், ஒருவர் பணியாற்றி பாதுகாப்பாக தங்கியதும், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக வேலைக்கு வருவதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக பனியன் நிறுவனங்களுக்கு வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முன்னர் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சேகரித்து பின்னர் பணியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில், தனியார் பனியன் நிறுவனங்கள் எந்த ஆவணங்களை பெற்று பணியில் சேர்ந்தனர்? வங்கதேச இளைஞர்கள் எந்த ஆவணங்களை கொடுத்தனர் உள்ளிட்ட விவரங்களை பனியன் நிறுவனத்தில் சேகரிக்கும் பணிகள் அடுத்த கட்டமாக துவங்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிக எண்ணிக்கையிலான வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதால், மேற்கொண்டு யாரேனும் முறைகேடாக தங்கி உள்ளார்களா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அத்துடன், தங்களிடம் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை அந்தந்த காவல் நிலையங்களில் வழங்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் இருப்பதால், சந்தேகத்தின் அடிப்படையில் தகவல்கள் கூற முடியாது எனவும் விசாரணையின் முடிவில் முழு தகவல்களும் வெளியாகும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.