கன்னியாகுமரி: கேப் சிட்டி பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
குமரி மாவட்டம் வில்லுக்குறியில் செயல்பட்டு வருகிறது கேப் சிட்டி பாரா மெடிக்கல் கல்லூரி. இது சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரணியல் காவல் நிலையம் ஆகிய இடங்களில் கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இரணியல் காவல் துறையினர், கல்லூரி முதல்வர் ஆண்டோ செல்வகுமார், அவரது மனைவி கல்லூரி தலைமையாசிரியர் செல்வராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று 35-க்கும் மேற்பட்ட மாணவிகள், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து கல்லூரியில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும், ஆண்டோ செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.