கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் நடைபெற்றுவந்தது. ஏராளமானோர் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். இந்த நேரத்தில் அங்கு வந்த எட்டாமடையைச் சேர்ந்த வசந்தா(60) என்ற பெண் திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட அங்கிருந்த காவல் துறையினர் அவரை தடுத்துக் காப்பாற்றினர்.
பின்னர், வசந்தாவிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவரது மகள் லலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இறந்துபோன அவரது மகளின் இரு குழந்தைகளும் அனாதையாக உள்ளனர். மகளின் மரணத்திற்கானக் காரணத்தை காவல்துறையினர் கண்டுபிடிக்காத காரணத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீ குளிக்க முயற்சி செய்ததாகக் கூறியது தெரியவந்தது.