கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்குமரி தமிழ்ச் சங்கம் சார்பில் குமரி கண்டம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பின்னர் இதில் பங்கேற்ற டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குமரி கண்டம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும், கி.பி. 19ஆம் நூற்றாண்டு முதல் குமரி கண்டம் குறித்த ஆய்வு தீவரமடைந்துள்ளதாகவும், லெமோரியா கண்டம் என்று அழைக்கப்படும் தற்போதைய பெயர் ஆரம்ப காலத்தில் குமரி கண்டமாக இருந்தததாகவும், ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்டிகா வரை குமரி கண்டம் பரவி இருந்தததாகவும் தெரிவித்தார்.
மேலும், உலகின் ஆதி மனிதன் முதன் முதலாக தோன்றிய கண்டம் குமரி கண்டம் தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாக இருப்பதாகவும், இந்த கருத்து வெளியானால் உலகத்திற்கே தமிழ் முன்னோடி என்ற பெருமை நமக்கு கிடைக்கும் எனவும், நமது பண்பாட்டின் ஆதாரம், தமிழ் நாட்டின் பெருமை, தமிழ் மொழியின் பெருமை, தமிழ் சமூகத்தின் பெருமை எல்லாம் ஆய்வின் மூலம் முழுமையாக வெளிவரும் எனவும் சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.