கன்னியாகுமரி: குளச்சல், முட்டம் மீன்பிடித்துறைமுகங்களில் மலைபோல் குவிந்த "கொழி சாளை" மீன்கள், ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விலை போனதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் கேரள வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர்.
குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 1000-க்கும் மேலான விசைப்படகு மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, சுமார் 7 முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் கடந்த 3 மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித்தொழிலுக்கு செல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தநிலையில், மீண்டும் 1000-க்கும் மேலான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலுக்குச்சென்று திரும்பிய நிலையில், அவர்கள் டன் கணக்கில் 'கொழி சாளை' மீன்களைப் பிடித்தனர். இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலைபோல் குவித்து வைத்திருந்த நிலையில், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்தது. இதனால் மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் ஆர்வம் காட்டினர்.
இவை சாதாரணமாக 50 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு மேல் விலைபோகும். ஆனால், தற்போது கொழி சாளை மீன்களின் சீசன் அதிகரித்துள்ளதால் அதிக விலை போகும் என எதிர்பார்த்த மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இன்று (ஆக.18) விற்பனைக்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்ட மீன்கள் 20 ரூபாய்க்கு விலை போனது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை! ஏமாற்றத்தில் மீனவர்கள்...