கன்னியாகுமரி: மலையோரங்களில் பெய்து வரும் கனமழையால் கோதையாறு நீர் மின் நிலையத்தில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணைக்கு இன்று மாலை நொடிக்கு 2,700 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. இதனால் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு 2,300 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. நீர்மட்டம் 66 அடியாக உள்ளது.
கோதையாறு நீர் மின் நிலையத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், கோதையாறு மின் நிலையம் 2ஆவது அலகில் இருந்து இன்று மாலை 3,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இரவில் மழையின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் பொதுப்பணித்துறை நீராதார பொறியாளர்கள் அணை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.