கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மூன்றாம் கட்டமாக மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் பணிபுரியும் கேரள மாநில மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு அரசு வழங்கும் இ.பாஸை பயன்படுத்தி செல்லத் தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக செல்லும்போது பணியில் இருக்கும் அலுவலர்கள் இவர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தவிர்க்கும் விதமாக குமரி-கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச்சாவடி அருகே உதவி மையம் ஒன்றை திறக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்தனர்.
அதன்படி கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் உதவி மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல் துறையினர் 144 தடை சட்டம் அமலில் உள்ளதால், உதவி மையம் அமைக்க அனுமதி மறுத்தனர். ஆனால், அதனை மீறி குமரி-கேரள எல்லைப் பகுதியில் உதவி மையத்தை அவர்கள் திறந்தனர்.
இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி உதவி மையம் திறந்ததாகக் கூறி இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட 17 காங்கிரஸ் கட்சியினரை தக்கலை துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் பார்க்க: கரோனாவால் வாடும் பூ வியாபாரிகள்!