நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநில அரசு, வெளி மாநிலங்களில் தங்கியுள்ள தங்கள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று ஊர் திரும்பலாம் என அறிவிப்பு வெளியிட்டது. இதனையறிந்த, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த 30 கேரள மாணவர்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, கேரள மாநிலத்திற்குள் நுழைவதற்காக, குமரி - கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடி அருகே இந்த மாணவர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர், இவர்களை சோதனை செய்தபோது, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திடம் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே மாணவர்களை கேரளா செல்வதற்கு காவல் துறையினர் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த திருவனந்தபுரம் மாவட்ட அலுவலர்கள், குமரி மாவட்ட அலுவலர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த தமிழ்நாடு அலுவலர்கள், அவர்களை கேரளா செல்ல அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் கூறுகையில், “மாணவர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்வதற்கான இ-பாஸ் மட்டுமே வைத்திருந்தனர். கன்னியாகுமரியில் நுழைவதற்கான பாஸ் எதுவும் அவர்களிடம் இல்லை. எனவே அவர்களைத் தடுத்து சோதனை செய்தோம். பின்பு திருவனந்தபுரம் அலுவலர்கள் மாணவர்களை விடும்படி வேண்டுகோள் வைத்தனர். அதனடிப்படையில் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்” என்றார்.
இதையும் படிங்க: திறக்கப்பட்ட கடைகளை மூடிய நெல்லை மாநகராட்சி!