கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், அகில இந்திய காங்., பொதுச்செயலாளருமான உம்மன்சாண்டி இன்று குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதிக்கு வந்தார். அவர் குமரி மக்களவைத் தொகுதி காங்., வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து அப்பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், ‘ரஃபேல் விவகாரத்தில் ராகுலின் கேள்விக்குப் பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
சபரிமலை விவகாரத்தில் நாங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவே இருக்கிறோம். சபரிமலை விவகாரத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் பாஜக அதனை அரசியலாக்கிவருகிறது. மத்தியில் மோடி தலைமையிலான அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறது. இதனால் இந்தியாவில் ராகுல் தலைமையிலான மதச்சார்பற்ற அரசு அமையும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும்’ என்று கூறினார்.