கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு, காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனிமையில் இருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்து, அதன் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், கந்துவட்டி தொடர்பாக இளைஞர் ஒருவர் அளித்த புகார், காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்த புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவலில் காசி எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, நான்கு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் தனிமையில் இருந்த ரகசிய வீடியோக்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகளிலும் காசியின் தந்தை தங்க பாண்டியனும் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கந்துவட்டி தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காசியின் தந்தை தங்கபாண்டியன் நான்கு வழக்குகளில் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.