கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். மேலும், தன்னை மிரட்டி பணம் பறித்ததாகவும் அவர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காசியை கைது செய்தனர். பின்னர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர் மீது ஏராளமான பெண்கள் பாலியல் தொல்லை, பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கடுக்காக கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில் காசியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட காசியை காவல் துறையினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவரது மடிக்கணினி, செல்ஃபோன் ஆகியவற்றிலிருந்து ஏராளமான பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக காசிக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து காசி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி காசியை 5 நாள்கள் காவலில் எடுத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகிறார். இந்த விசாரணையில் காசி தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: 'என் மகன் தப்பு செய்யவில்லை; அவனை என்கவுன்டர் செய்ய முயற்சி செய்கிறார்கள்' - காசியின் தந்தை மனு